தமிழ்நாடு

குழந்தைகளை பறிகொடுத்த விஜய்.. அழைத்து ஆறுதல் கூறிய ரஜினி..!

குழந்தைகளை பறிகொடுத்த விஜய்.. அழைத்து ஆறுதல் கூறிய ரஜினி..!

webteam

தகாத உறவு விவகாரத்தில் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த அபிராமியின் கணவர் விஜய்யை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

சென்னை அருகேயுள்ள குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளையைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி அபிராமி. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இந்தத் தம்பதிக்கு 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். விஜய் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே அபிராமிக்கு சுந்தரம் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டது. இதனால் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்து தப்பியோடிய அபிராமி கன்னியாகுமரி மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அபிராமியின் பக்கத்து வீட்டுக்காரர்கள் பலரும், விஜய் ரொம்ப நல்ல மனிதர் என்றும், அபிராமிக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்நிலையில் அபிராமியின் கணவர் விஜய்யை தனது வீட்டிற்கு நேரில் அழைத்த நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு ஆறுதல் கூறினார். சென்னை போயஸ்கார்டனில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 

ஏற்கெனவே ‘காலா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு ஊர் திரும்பும்போது ரஜினி ரசிகரான காசி விஸ்வநாதன் என்பவர் ரயில் விபத்தில் சிக்கினார். இதில் காசி விஸ்வநாதனின் கால் துண்டானது. அவரது சிகிச்சை செலவை ஏற்பதாகவும், பின்னரும் உதவுவதாகவும் ரஜினி அறிவித்திருந்தார். இந்நிலையில் காசி விஸ்வநாதனையும் தனது வீட்டிற்கு அழைத்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்தார்.

இதேபோல ரஜினியின் தீவிர ரசிகரான அஷ்வின் என்ற சிறுவன் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். அஷ்வின் உடல் உறுப்புகளும் தானம் செய்யப்பட்டன. அஷ்வின் நல்ல ஓவியரும் கூட. ரஜினி புகைப்படத்தையும் வரைந்துள்ளார். இந்நிலையில் அஷ்வின் காகிதத்தில் வரைந்த ஓவியத்தில் கையெழுத்திட்ட ரஜினி அவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.