கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகேயுள்ள தொட்டகாஜனூரில் தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்த கன்னட நடிகர் ராஜ்குமார், கடந்த 2000-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் 108 நாட்களுக்குப் பிறகு ராஜ்குமாரை வீரப்பன் விடுவித்தார்.
Read Also -> “என்னை ஆஜராக உத்தரவிட அதிகாரம் இல்லை ஹெச்.ராஜா
இது தொடர்பான வழக்கு கோபிசெட்டிபாளையம் மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த 14 பேரில், வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா ஆகியோர் போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பப்பட்டனர். மல்லு என்பவர் இறந்துவிட்டார். ரமேஷ் தலைமறைவாகிய நிலையில், எஞ்சிய 9 பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிபதி மணி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது. அதன்படி 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், கோவிந்தராஜ், அன்றில் என்கிற ஏழுமலை, செல்வம் என்கிற சத்யா, அமிர்தலிங்கம், பசவண்ணா, நாகராஜ், புட்டுச்சாமி, கல்மண்டிராமன், மாறன் ஆகிய 9 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். குற்றங்களை நிரூபிக்கும் வகையில் சாட்சியங்கள் இல்லை என தெரிவித்த நீதிமன்றம், அதனால் அனைவரையும் விடுவிப்பதாக தெரிவித்துள்ளது.