எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக்கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. மாணவர்களும் பெருவாரியாக போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். அரசியல் கட்சிகள் பலவும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. போராட்டங்களின் போது ஒரு சில இடங்களில் மட்டுமே வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறை வெடித்தது.
இந்நிலையில், எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக்கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக ரஜினி தனது ட்விட்டரில், “எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.