பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களைச் சந்தித்து கருத்து கேட்க, இந்திய சுயராஜ்ய கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் இன்று தமிழகம் வந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அத்திபாடி கிராமத்தில் யோகேந்திர யாதவ் தனது குழுவினருடன் சென்றுள்ளார். அப்போது, செங்கம் பகுதியில் யோகேந்திர யாதவ் சென்ற காரினை போலீசார் தடுத்து நிறுத்தினர். அனுமதி இன்றி விவசாயிகளை சந்திக்க செல்வதாக கூறி அவர்களை செங்கம் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக யோகேந்திர யாதவ் தனது ட்விட்டரில், “திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் என்னையும், எனது குழுவினரையும் தமிழக போலீசார் கைது செய்தனர். 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான குழுவினர் எங்களை அழைத்ததன் பேரில் நாங்கள் வந்தோம். விவசாயிகளை சந்திப்பதற்கு முன்பாக நாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டோம். எங்களது போன்கள் பறிக்கப்பட்டன. வலுக்கட்டாயமாக போலீஸ் வேனில் எங்களை ஏற்றினர்.
என்னுடைய வருகையால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று திருவண்ணாமலை எஸ்.பி கூறுகிறார். நான் விவசாயிகளை அவர்களது வீடுகளில் சந்திக்கவே வந்தேன். ஆனாலும், எஸ்.பி எங்களை அனுமதிக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதற்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கமல் கூறுகையில், “சுற்றுச் சூழல் குறித்து பேசினாலே குற்றம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது மிகவும் கவலை அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.