தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நிச்சயம் நடவடிக்கை - அமைச்சர் எ.வ. வேலு உறுதி

webteam

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவி கடந்த 13-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் கூறிய நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதில் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. 

இதையடுத்து, கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கு காரணமானவர்களை கண்டறிய வேண்டும் என பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் என பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ. வேலு கூறியதாவது:

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்துவதில் தவறில்லை. ஆனால், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற போராட்டம் ஜனநாயக போராட்டம் அல்ல. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. ஆய்வகங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இது நியாயமா?

அதே பள்ளியில் படிப்பை தொடர மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளனர். அந்த மனுக்கள் அனைத்தும் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எ.வ. வேலு கூறினார்.