தமிழ்நாடு

“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்

“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்

sharpana

”ஹெல்மெட் அணியாமல் செல்லும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

”இன்று காலையில் இருந்து ஹெல்மெட் தொடர்பாக இதுவரை 2,200 வழக்குகளை பதிவு செய்துள்ளோம். ஆயிரம் வழக்குகள் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மீது போடப்பட்டுள்ளது. வழக்கு போடுவது முக்கியமல்ல. அனைவரும் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதே காவல்துறையின் நோக்கம்.

பைக் ஓட்டுபவர்களும் சரி, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் சரி ஹெல்மெட் அணியவேண்டும் என்பது ஏற்கனவே சட்டம் இருக்கிறது. இது திடீரென அறிவிப்போ? சோதனையோ இல்லை. முன்கூட்டியே வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளோம். ஆய்வுக்குப் பிறகே இதனை தீவிரப்படுத்தி உள்ளோம். பைக்கில் செல்லும் 2 பேரும் ஹெல்மெட் அணிய வேண்டும்.

காவல்துறையினர் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து விதிகளை மீறும் காவல்துறையினர் குறித்து சமூக வலைதளத்திலும் பதியப்பட்டு வருகிறது. அதனை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் தான் ரோல்மாடலாக இருக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நடவடிக்கை எடுப்போம். துறைரீதியிலான நடவடிக்கை கூட எடுக்கப்படும்.

ஹெல்மெட் சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வரும். அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். பின்னால் அமர்ந்து செல்லும் போது யாராவது இருந்தாலும் ஹெல்மெட் போட வேண்டும். பெண்களும் அணிய வேண்டும். புதிதாக ஹெல்மெட் அணிய ஒருவிதமான வசதி இல்லாதது போல தோன்றறும். ஆனால் தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து பயணிக்கும் போது தான் தங்களுடைய உயிருக்கு பாதுகாப்பை அது அளிப்பது தெரியும். குடும்பத்தினரிடம் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து சென்றால் அது தான் உங்களுக்கு பாதுகாப்பு" என்று சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் கூறியுள்ளார்.