தமிழ்நாடு

நீட் ஹால் டிக்கெட் குளறுபடிகளை சரிசெய்ய நடவடிக்கை..!

Rasus

நீட் ஹால் டிக்கெட் குளறுபடிகளை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

மே 5-ஆம்‌தேதி இந்தியா முழுவதும் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான‌ நீட் நுழைவுத்தேர்வு நடைபெறவுள்ளது. அதற்காக, ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மாணவர்கள் நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்‌கம் செய்து வருகின்றனர். அதில் சில தனியார் பள்ளி மாணவர்களுக்கு மைய எண் மற்றும் மையங்களின் பெயர்கள் மாறி இருப்பது தெரியவந்துள்ளது.

மாணவர்கள் ஹால் டிக்கெட்டில் உள்ள தவறுகள் குறித்து தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளி தலைமையாசிரியர் முதன்மைக்கல்வி அலுவலரிடம் தகவல் தெரிவித்தால்,‌ அவர் தவறான விவரங்களுடைய நீட் நுழைவுச்சீட்டினை ஸ்கேன் செய்து பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் மின்னஞ்‌சல் முகவரிக்கு அனுப்புவார்‌.‌ நுழைவுச்சீட்டின் நகலா‌னது தேசிய தேர்வுகள் முகமைக்கு அனுப்பப்பட்டு, தவறான விவரங்கள் சரி செய்யப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.