தமிழ்நாடு

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை? - பெண் போலீஸில் புகார்

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை? - பெண் போலீஸில் புகார்

webteam

அலட்சியத்துடன் செயல்பட்ட கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட பெண் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தின் பரபரப்பு ஓய்வதற்குள், தலைநகர் சென்னையில் இதே போல் ஒரு சம்பவம் நடந்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் மீது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனக்கு ரத்தம் செலுத்தப்படுவதற்கு முன் தனியார் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தனக்கு எச்.ஐ. வி பாதிப்பு இல்லை என்றும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்ட பின்னரே தனக்கு எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன் வசந்தாமணி மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கும், தனது குழந்தைக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு உதவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரிந்தால், சமூகம் தன்னை புறக்கணித்துவிடும் என்பதாலேயே இத்தனை நாட்கள் புகார் அளிக்காமல் இருந்ததா‌க விளக்கமளித்துள்ளார்.