தமிழ்நாடு

போக்குவரத்து விதிகளை மீறினால் இனி போலீசார் மீதும் நடவடிக்கை...!

போக்குவரத்து விதிகளை மீறினால் இனி போலீசார் மீதும் நடவடிக்கை...!

Rasus

சென்னையில் தலைக்கவசம் அணியாமல் செல்லும் காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யவும், குடிபோதையில் வாகனம் இயக்கும் காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளளார்.

வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிவதை உறுதி செய்யும் வகையில் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதில், காவல்துறையினர் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில்லை என்ற புகாரும் எழுந்தது. இது தொடர்பாக, போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய காவல் ஆணையர் விஸ்வநாதன், காவல்துறையினர் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பணியில் இருக்கும்போதும் அதனை பின்பற்ற வேண்டும் என்றும், தவறினால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்து காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டினால், காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதோடு, அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக காவல்துறையினர் மீது பதிவு செய்யப்படும் வழக்கு விவரங்களை தனியாக அறிக்கை தயாரித்து சமர்ப்பிக்கவும் போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.