தமிழ்நாடு

+2 பொதுத்தேர்வு வினாத்தாள் மாறியதால் மறு தேர்வு: 2 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'

JustinDurai

புதுக்கோட்டையில் +2 பொதுத்தேர்வின் போது இரு மாணவர்களுக்கு வினாத்தாள் மாற்றி வழங்கிய சம்பவம் தொடர்பாக பணியிலிருந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 23ஆம் தேதி 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. அப்போது, ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 2 மாணவர்களுக்கு அடிப்படை மின் பொறியியல் தேர்வு வினாத்தாளுக்கு பதிலாக அடிப்படை மின்னனு பொறியியல் தேர்வுக்கான வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த இரு மாணவர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அன்று தேர்வு அறையின் கண்காணிப்பாளராக இருந்த தனியார் பள்ளி ஆசிரியர் புவனேஸ்வரியிடமும், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் அலுவலர் சாமிநாதனிடமும், துணை கண்காணிப்பு அலுவலர் சுபத்ராவிடமும் இரண்டு மாணவர்களும் முறையிட்டு உள்ளனர். ஆனால் மாணவர்களின் பிரச்சினைக்கு அப்போது அவர்கள் தீர்வு காணவில்லை என கூறப்படுகிறது. இதன்பின் இது குறித்து மாணவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இரண்டு மாணவர்களும் அன்று தேர்வு எழுத முடியாமல் போன சூழல் குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில்  சம்பந்தப்பட்ட பிரச்சனை நடந்தபோது  பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியின் தேர்வு மையத்தில்  முதன்மை கண்காணிப்பு அலுவலராக பணியாற்றிய அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாமிநாதன், துணை கண்காணிப்பு அலுவலராக பணியாற்றிய லெம்பலக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியின் முதுநிலை ஆசிரியர் சுபத்ரா ஆகியோரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் தேர்வு அறை கண்காணிப்பாளராக பணியாற்றிய தனியார் பள்ளி ஆசிரியை புவனேஸ்வரியையும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் சொல்லி பணிநீக்கம் செய்துள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கடந்த 23ஆம் தேதி வினாத்தாள் மாறியதால் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட  மாணவர்கள் இருவரும் இன்று அதே மையத்தில் தேர்வு எழுதினர்.

இதையும் படிக்கலாம்: ”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை