தமிழ்நாடு

முறையாக பணிக்கு வராததால் சென்னையில் பெண் ஊழியர் மீது ஆசிட் வீசியவர் கைது

webteam

பெண் ஊழியர் மீது ஆசிட் வீசி எரிக்க முயன்ற ரத்த பரிசோதனை நிலைய உரிமையாளர் சிறையில் அடைக்கப்பட்டார்.‌ 

சென்னை மடிப்பாக்கத்தை அடுத்த வாணுவம்பேட்டையில் தனியார் ரத்த பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. ராஜா என்பவர் நிர்வகித்துவரும் இந்நிலையத்தில், அதே பகுதியைச் சேர்ந்த யமுனா என்பவர் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். வழக்கம்போல நேற்று வேலை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், ராஜாவுக்‌கும், யமுனாவுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் உச்சகட்ட கோபமடைந்த ராஜா, அங்கு பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த அமிலத்தை யமுனா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். வலி தாங்க முடியாமல் அலறித் துடித்த யமுனா, அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தப்பியோடிய ரத்தப் பரிசோதனை நிலைய உரிமையாளர் ராஜா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் ‌நடத்தப்பட்ட விசாரணையில், யமுனா முறையாக பணிக்கு வராத காரணத்தால், ராஜா அவரை பலமுறை கண்டித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ரத்தப்பரிசோதனை நிலையம் நஷ்டத்தில் இயங்கிவரும் சூழலில், யமுனாவின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்த ராஜா, அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி இருப்பதாக கூறுகின்றனர் காவல்துறையினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யமுனாவிடம் பெறப்பட்டுள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், ரத்தப் பரிசோதனை நிலைய உரிமையாளர் ராஜா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 30 சதவிகித அளவிலான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யமுனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.