தமிழ்நாடு

விசாரணையின் போது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட கைதி! மனைவி அதிர்ச்சி புகார்

webteam

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி விசாரணையின் போது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கத்தில் உள்ள சென்னை மண்டல அலுவலகத்தில் போதைப் பொருள் கட்டுப்பாட்டு துறை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ராமகிருஷ்ணா புரத்தை சேர்ந்த ராயப்பா அந்தோணி ராஜ் என்பவர் மெத்தபேட்டமைன் என்ற 50 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருளை, வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போதைப் பொருள் கட்டுப்பாட்டு துறைக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து தெலுங்கானா பகுதிக்கு விரைந்து சென்ற போதை கட்டுப்பாட்டு துறை போலீசார் அவரை கைது செய்து அழைத்துவந்து, சென்னை மண்டலத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரனையின் போது யாரும் எதிர்பாராத நேரத்தில் மூன்றாவது மாடியில் இருந்து ராயப்பா அந்தோணி ராஜ் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் விஜயராகவன் உள்ளிட்ட காவலர்கள் தடவியல் நிபுணர்கள் அழைத்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூராய்வுகாக அவரது உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அரசு போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை சென்னை மண்டல அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்ட ராயப்பாவின் தாய் கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.

அதில், கடந்த 19-ம் தேதி வீட்டில் இருந்து வேலைக்காக விசாகப்பட்டினத்திற்கு சென்ற நிலையில், இரவு வரை தொலைப்பேசியில் தங்களுடன் தொடர்பு கொண்டு பேசியதாக கூறினார். அதன்பின்னர் அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை எனவும், 21-ம் தேதி இரவு தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட அவர், 19-ம் தேதி தன்னை கைது செய்ததாகவும் தொடர்ந்து அடித்து துன்புறுத்தியதாக கூறியுள்ளார். மேலும் அவரை பொன்னேரியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதால் தன்னிடம் உள்ள பொருட்களை வந்து பெற்று செல்லும்படி சொல்லியதாக கூறிய நிலையில், இன்று காலை அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டதாக கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

நீதிமன்றம் விடுமுறையில் இருக்கும் நிலையில் நீதிமன்றதிற்கு குடும்பத்தினரை வரவழைப்பதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார் ராயப்பாவின் தாய். இதுகுறித்து பேசிய ராயப்பாவின் மனைவி, தன்னுடைய கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தற்கொலை செய்யும் அளவிற்கு கோழை கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் அவரது உடலை பெற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.