Madras High court pt desk
தமிழ்நாடு

அமைச்சர் MRK.பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு – உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: V.M.சுப்பையா

கடந்த 2006 - 2011ம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த எம்ஆர்கே.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அவரது மனைவி மற்றும் மகன் மீதான இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், எம்ஆர்கே.பன்னீர்செல்வம் உள்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், வழக்கில் முதல் தகவல் அறிக்கை, குற்றப் பத்திரிகையை மேற்கோள் காட்டி வாதங்கள் முன்வைக்கப்பட்டன. எம்ஆர்கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில், குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துக்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரி என்றும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

court order

மேலும், அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்கும்படி, கடலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.