விபத்தில் உயிரிழந்த பவானி
விபத்தில் உயிரிழந்த பவானி pt web
தமிழ்நாடு

பறிபோன 4 உயிர்கள்; "10 வருஷமா இதேநிலைதான்; எங்களுக்கு பாதுகாப்பு இல்ல" கதறும் பொத்தேரி பகுதி மக்கள்

PT WEB

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த பொத்தேரி பகுதியில், பிரபல தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் கல்லூரி என்பதால், காலை வேலையில் எப்பொழுதுமே பரபரப்புடன் காணப்படும். மாணவ மாணவிகள் மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் பொதுமக்கள் என எப்பொழுதும் அப்பகுதி மக்கள் நடமாட்டத்துடனே இருக்கும்.

தற்பொழுது தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை, சென்னை - திருச்சி தேசிய சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் முறையான சிக்னல் உள்ளிட்டவை வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொத்தேரி பகுதியில், அதிவேகமாக தாம்பரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி, அங்கு சாலையை கடக்க 3 இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த 4 பேர் மீது கண்மூடித்தனமாக இடித்து விபத்தை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து டிப்பர் லாரி அங்கு இருந்த சென்டர் மீடியங்களில் மோதி, அதனை அடுத்து மரத்திலும் மோதியது. மரத்தில் மோதியதில், மரமும் முறிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில், லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பவானி (40), இரு கல்லூரி மாணவர்கள் மற்றும் இசை பள்ளி ஆசிரியர் சைமன் (40) என 4 பேர் உயிரிழந்தனர். பார்த்தசாரதி (50) என்பவர் படுகாயம் அடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் கூடுவாஞ்சேரி போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லாரியை ஒட்டி வந்த ஓட்டுநரான திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். விபத்து நடைபெற்ற இடத்தில், போக்குவரத்து சிக்னல் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் பேரிகாடுகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கடந்த 10 வருடங்களாகவே இப்பகுதி சாலைகள் தடுப்போ பேரிகாடோ அமைக்கப்படாமல், போக்குவரத்து காவலர்கள் இல்லாமல், சிக்னலும் இல்லாமல் இருப்பதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். இது புதியதலைமுறையின் கள ஆய்விலும் உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில், பொத்தேரி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்ர்த்தசாரதி என்பவருக்கு ரூ.50,000 நிதியுதவி அறிவித்துள்ளார்.