தமிழக-கேரளா எல்லைப்பகுதியான தேனி மாவட்டதில் மலைச்சாலை வழியாக கேரளா ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விதிமுறைகளுக்கு புறம்பாக அதிக அளவில் ஆட்களை ஏற்றிச் செல்வதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
தமிழக-கேரளா எல்லைப்பகுதியான தேனி மாவட்டம் போடிமெட்டு அருகே உள்ள கேரள இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்டங்களுக்கு தொழிலாளர்களை போடியிலிருந்து ஜீப் மற்றும் பிற வாகனங்களில் வேலைக்கு அழைத்து செல்கின்றனர்.
நான்கு சக்கர வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் ஆட்களை ஏற்றிச் செல்வதோடு மட்டுமல்லாமல் அசுரத்தனமான வேகத்தில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் விபத்துகளும் அதிக அளவு உயிரிழப்பும் கூட ஏற்பட்டு வருகிறது. அறியாமையில் உள்ள கூலித் தொழிலாளிகளை விதிமுறைகளுக்கு புறம்பாக அதிக அளவில் ஏற்றிச் செல்லப்படுவதால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்களும் மற்றும் இதர வாகன ஓட்டிகளும் அச்சமடைந்து வருகின்றனர்.
காவல்துறை சோதனைச் சாவடியோ அங்கு பெயரளவில் மட்டுமே செயல்பட்டு வருவதாகவும், வாகன ஓட்டிகள் வனத்துறை காலணி பாதையில் தொழிலாளிகளை இறக்கிவிட்டு சோதனை சாவடியை கடந்த பின் மலைச் சாலையில் மீண்டும் ஏற்றி செல்வதாகவும் கூறபடுகிறது. இது தொடார்பாக முந்தல் வாகன சோதனை சாவடியில் உள்ள காவல்துறையினரை அதிவேகமாக செல்பவர்களை எச்சரித்து நடவடிக்கை எடுக்கும் படியும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.