தமிழ்நாடு

ரஜினிகாந்துடன் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் நேரில் சந்திப்பு

webteam

நடிகர் ரஜினிகாந்தை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் நேரில் சந்தித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. சென்னை போயஸ்கார்டன் வீட்டில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "டெல்லியில் ஏற்பட்ட போராட்டத்திற்கு (வன்முறை) உளவுத் துறையின் தோல்வியே காரணம்; அதற்காக மத்திய அரசைக் கண்டிக்கிறேன். மதத்தை வைத்து அரசியல் செய்வதையும் வன்மையாக கண்டிக்கிறேன். சிஏஏ போராட்டத்தை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும்.

வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்; இல்லையென்றால் ராஜினாமா செய்ய வேண்டியதுதான். போராட்டம் எப்போதும் வன்முறையாக மாறக் கூடாது, அமைதியாக நடைபெறலாம்" என்று தெரிவித்து இருந்தார். ரஜினியின் இந்தக் கருத்துக்கு கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

இருப்பினும், சிஏஏ குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டுவிட்டதால், மத்திய அரசு இனி அதனை திரும்ப பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்து இருந்தார். சிஏஏவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அவர் கருத்து தெரிவித்தார். இதனால், இந்த கருத்துக்கு இஸ்லாமிய தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், இஸ்லாமிய தலைவர்களை ரஜினி நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் பரவியது. அதன்படி நடிகர் ரஜினிகாந்துடன் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, சிஏஏவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ரஜினியிடம் அபூபக்கர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.