நெல்லை மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு 800 முதல் 900 பேர் வரை நாய்க்கடிக்கு மருந்து எடுத்துக்கொள்வதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே குறிச்சி குளத்தில், சில தினங்களுக்கு முன் வெறிநாய் ஒன்று 4 வயது பெண் குழந்தையையும், 3 வயது ஆண் குழந்தையையும் கொடூரமாக கடித்துக் குதறியது. அக்கம்பக்கத்தினர் பார்த்து மீட்டதால் இருகுழந்தைகளும் உயிர் பிழைத்துள்ளனர். நாய்க்கடியின் கோரம் இவர்களின் பிஞ்சு முகங்களை சிதைத்துள்ளது.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் தெருநாய்கள் மக்களை கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவே புதிய தலைமுறை மேற்கொண்ட கள ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு மாதத்திற்கு மட்டும் 800 முதல் 900 பேர் வரை நாய்க் கடிக்கான மருந்தை எடுத்துக் கொள்வதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் 25 லட்சம் ரூபாய் வரை இதற்காக மாவட்ட சுகாதாரத்துறை செலவிட்டுள்ளது. வெறிநாய் கடித்தால் ரேபிஸ் எனும் வெறி நோய் உண்டாகும். உயிரைக் கொல்லும் இந்த நோய் வந்தால் முதலில் காய்ச்சல், தலைவலி ஏற்படலாம். அதைத் தொடர்ந்து பதற்றம் மற்றும் தண்ணீரைக் கண்டாலே பயப்படும் சூழல் உருவாகும்.
தெரு நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அவற்றைப் பிடித்து கருத்தடை செய்யப்படுவதாகவும் வெறி பிடிக்காமல் இருக்க நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும் நெல்லையில், 400 நாய்களுக்கு மேல் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் தெரு நாய்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறுகின்றனர். ஆயினும் இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் எனக் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.