தமிழ்நாடு

``அமைச்சர் பிடிஆர் முரணாக பேசுகிறார்”- தலைமை செயலகத்தில் கூடிய 500 + அரசு ஊழியர்கள்!

webteam

இன்று மதியம் சென்னை தலைமை செயலகத்தில் உணவு இடைவேளையின் போது தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் சுமார் 500 பேர் ஒன்று கூடி திறந்தவெளி கூட்டத்தை நடத்தினர்.

அரசு ஊழியர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்றி தர வேண்டும் என அந்த கூட்டத்தில் பேசப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் பேசுகையில், “2 மாதங்களுக்கு ஒரு முறை உணவு இடைவேளை கூட்டம் நடத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தோம். அந்த அடிப்படையில் முதல் கூட்டத்தை இன்று நாங்கள் நடத்திய உள்ளோம்.

அரசு ஊழியர்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கத்திடம் வைத்துள்ளோம். குறிப்பாக அகவிலைப்படியை உரிய காலத்தில் வழங்காமல் தொடர்ந்து தள்ளிப் போட்டு வருகிறார்கள் தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் விரைந்து வழங்க வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கோரிக்கை. ஆனால் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதற்கு முரணாக பேசி வருகிறார். அதை எங்களால் ஏற்க முடியாது... எந்த விலை கொடுத்தேனும் பழைய ஓய்வூதிய திட்டத்தை பெற்றே தீருவோம்" என்றனர்