தமிழ்நாடு

கொடைக்கானலில் பசி பட்டினியுடன் பரிதவிக்கும் பழங்குடியின கிராம மக்கள்!

webteam

ஊரடங்கு உத்தரவால் வருமானம் இல்லாமல் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்டு வருவதாக கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பழங்குடியினர் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் கிராமங்கள் உள்ளன. இதில் சாலை ஓரத்தில் மூலையாறு, வாழைகிரி, தாமரைக்குளம், கடுகுதடி உள்ளிட்ட 20 கிராமங்கள் உள்ளன. இவை தவிர மண் சாலையில் பல கிராமங்களும், சாலையே இல்லாமல் அடர்ந்த வனப்பகுதியில் ஏராளமான கிராமங்களும் உள்ளன. இவர்கள் அந்த பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல், பயிர்கள் அறுவடை செய்தல் போன்ற வேலைகளுக்கு செல்வது வழக்கம்.

ஒரு நாள் கூலியாக 100 ரூபாய் பெறும் இவர்களுக்கு, கடந்த 22-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சுய ஊரடங்கு காலத்தில் இருந்தே வேலை இல்லை என்றும், அன்றில் இருந்து இன்று வரை வேலை இல்லாமல், வருமானத்திற்கு வழி இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர். பணம் இல்லாததால் அத்தியாவசிய பொருட்களான அரிசி பருப்பு கூட வாங்க முடியாமல் ஒருவேளை உணவு சாப்பிட்டு வாழ்வதாக பழங்குடியின கிராமங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போது கீழ்மலைப்பகுதிகளில் வாழைகிரி, மூலையாறு பழங்குடியின கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதிகள் மற்றும் தோட்டங்களுக்குள் யானைகள் நடமாட்டமும் புதிதாக வந்துள்ளதால், கிழங்கு, கீரை, பழங்கள் உள்ளிட்ட வனப்பொருட்களையும் சேகரிக்க முடியாமல் உயிர் அச்சத்துடன் வாழ்வதாகவும் கூறுகின்றனர். இதனை அரசு கவனத்தில் கொண்டு உணவு பொருட்களுக்கான தேவையை பூர்த்தி செய்யவும், தோட்டப்பகுதிகளுக்குள் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், பழங்குடியினர் கிராமத்தின் உணவு தேவையை உடனடியாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.