கல்விச் சான்றிதழ்களில் சாதி பெயரை குறிப்பிடுவதை நீக்கினால் 2050-க்குள்ளாவது சாதி ஒழியும் என்று கருத்து தெரிவித்துள்ளார் நீதிபதி வைத்தியநாதன்.
திருச்சியை சேர்ந்த ஓய்வுபெற்ற துணை கலெக்டர் முத்தையன் என்பவர், கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்துக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு எத்தனை பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு டி.என்.பி.எஸ்.சி. பதில் அளிக்கவில்லை. இதுதொடர்பான மனுவை விசாரித்த தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், மனுதாரர் கேட்கும் விவரங்களை வழங்க கடந்த 2009-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி. மேல்முறையீடு செய்தது.
கடந்த 2010-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “சாதி ரீதியான விவரங்களை வெளியிடுவதால் மக்களிடையே அதிருப்தியும், சாதி ரீதியான சண்டையும் தான் வரும்” என்று வாதிட்டார்.
இதையடுத்து, '30 நாட்களுக்குள் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், 'கல்விச் சான்றிதழ்களில் சாதி பெயரை குறிப்பிடுவதை நீக்கினால் 2050-ம் ஆண்டிற்குள்ளாவது சாதி ஒழியும் என்று கருத்து தெரிவித்தார். மேலும் அவர், 'சான்றிதழில் சாதிப்பெயரை நீக்கினால் தமிழக மக்கள் சாதி, மத பாகுபாடின்றி ஒரே குடையின் கீழ் நிற்பர்' என்றும் தெரிவித்தார்.