ஆவடி பெருநகராட்சி
ஆவடி பெருநகராட்சி  புதிய தலைமுறை
தமிழ்நாடு

’அடிப்படை வசதியே இல்லை’- ஆவடி நகராட்சியை, மாநகராட்சி-னு போர்டு மட்டும்தான் மாத்துனாங்க! மக்கள் வேதனை

PT WEB

தமிழகத்தின் பதினைந்தாவது மாநகராட்சியாக ஆவடி மாநகராட்சி 2019ஆம் ஆண்டு உருவானது. திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய மாநகராட்சியாக கருதப்படும் ஆவடி மாநகராட்சியில் ராணுவ என்ஜின் தொழிற்சாலை, முப்படைப்பிரிவினருக்கான உடைகள் தயாரிக்கும் தொழிற்சாலை போன்ற நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

ஆவடி பெருநகராட்சி

சராசரியாக நான்கு லட்சம் மக்கள் கொண்ட இந்த மாநகராட்சியில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் அரசு இதற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இங்கு பல்வேறு அடிப்படை பணிகள் இன்னும் முழுமையடையாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு இங்கு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை பணி இன்னும் முடிவடையவில்லை. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி தனியார் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் ஒருமுறை தேங்கியிருக்கும் கழிவுநீரை எடுக்க மூவாயிரம் ரூபாய் வரை வாங்குவதாக மக்கள் வேதனை
தெரிவித்தனர். மேலும் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வீடுக்கு குடிநீர் குழாய் திட்டமும் கிடப்பிலே தான் இருக்கிறது.

இதற்கிடையே மாநகராட்சியில் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் அரசு பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படாமலும், தினசரி ஆங்காங்கே குப்பைகள் சரிவர எடுக்காமலும் இருப்பதாக அப்பகுதிமக்கள் குற்றம்சாட்டினர்.

இது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் கேட்டபோது குப்பைகளை அகற்றும் பணி எவ்வித சிக்கலுமின்றி நடைபெறுவதாக கூறினார். 

வருவாயை ஈடு செய்ய வரி கட்டாதவர்கள் மீது புதிய வரி விதிப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், மாநகராட்சியாக வளர்ச்சி பெற்ற பிறகு 70 முதல் 80 கிலோமீட்டர் வரை சாலைகள் போடப்பட்டதாக கூறினார்.

இவ்வாறாக ஒரு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமலே உள்ளன. அவற்றை நிறைவேற்ற மாநகராட்சி நிர்வாகம் முன்னெடுக்குமா?