ஆர்த்தி தாய் சுஜாதா pt
தமிழ்நாடு

ரவிமோகன் - ஆர்த்தி வழக்கு| ’நாங்கள் மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கவில்லை..’ - ஆர்த்தி தாய் கண்ணீர்

நாங்கள் மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்கவில்லை என ஆர்த்தியின் தாய் சுஜாதா கண்ணீருடன் பேசியுள்ளார்.

Rishan Vengai

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கில், மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டதாக வரும் குற்றச்சாட்டை ஆர்த்தியின் தாய் சுஜாதா மறுத்துள்ளார். குழந்தைகளுக்காக இதுவரை எந்தச் சலுகையும் கோரவில்லை எனக் கூறிய அவர், நீதிமன்றம் ஆண்டுக்கு 86 லட்சம் பள்ளிக் கட்டணம், ஆர்த்திக்கு மாதம் 3 லட்சம், இரு மகன்களுக்கும் தலா 1 லட்சம் வழங்க உத்தரவிட்டதாக விளக்கினார்.

நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், ஆர்த்தி மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு குறித்தும், தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் ஆர்த்தியின் தாயார் சுஜாதா பேசியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுஜாதா, “மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் நாங்கள் கேட்கவில்லை. அது மிகப் பெரிய தொகை. இத்தனை ஆண்டுகளாக குழந்தைகளுக்காக எந்தச் சலுகையும் நாங்கள் கேட்டதில்லை” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

ரவி - ஆர்த்தி

மேலும், “ரவி மோகனின் இரண்டு மகன்களுக்கும் ஆண்டுக்கு ரூ.86 லட்சம் பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், ஆர்த்திக்கு மாதம் ரூ.3 லட்சமும், இரண்டு மகன்களுக்கும் தலா ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்று கூறினார்.

அத்துடன், “ரவி மோகன் மாதம் முழுவதும் குழந்தைகளை சந்திக்கலாம். ஆனால், அவர்கள் தற்போது உளவியல் ரீதியாக மீண்டு வருவதால், அவரை சந்திக்க குழந்தைகளே விரும்பவில்லை” என்றார்.

தொடர்ந்து, “என் மகளின் திருமண வாழ்க்கையை பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு ஒருபோதும் இல்லை. ரவி மோகன் தற்போது ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது சொந்த வீட்டில்தான் வசித்து வருகிறார். அவர் இன்னும் தனது தோழியுடன்தான் இருக்கிறார்” என்றும் தெரிவித்தார்.

ஆர்த்தி தாய் சுஜாதா

மேலும், “நாங்கள் பில்லி, சூனியம் வைத்ததாக ரவி மோகன் கூறுவது முற்றிலும் பொய். ஒரு தோழிக்காக மனைவியை தவறாக சித்தரிப்பது சரியா?” என்று கேள்வி எழுப்பிய அவர், “ஆர்த்தி இன்னும் ரவி மோகனுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறார். அதற்காகத்தான் போராடி வருகிறார். நான் தயாரிக்கும் படத்தில் ரவி மோகன் சம்பளம் வாங்கியுள்ளார். அவரின் பணத்தை நான் ஏமாற்றிவிட்டதாக அவர் கூறினால், அதை பொதுவெளியில் நிரூபிக்க முடியுமா?” என்றும் கூறியுள்ளார்.