மன அழுத்தம் காரணமாக விசாரணை செய்ய வந்த மாஜிஸ்திரேட்டை மரியாதை குறைவாக காவலர்கள் பேசினர் என நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடுத்ததடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருக்கும் கான்ஸ்டபிள் ஒருவர், மாஜிஸ்திரேட்டிடம் "உன்னால ஒன்னும் புடுங்கமுடியாது டா" என மரியாதை குறைவாக பேசியுள்ளார். மேலும், மாஜிஸ்திரேட் கேட்ட தரவுகளை தர மறுப்பதாகவும் மாஜிஸ்திரேட் மதுரை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில், மாஜிஸ்திரேட்டை அவமதித்த விவகாரம் தொடர்பாக கூடுதல் எஸ்.பி, டிஎஸ்.பி, காவலர் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது மன அழுத்தம் காரணமாக விசாரணை செய்ய வந்த மாஜிஸ்திரேட்டை மரியாதை குறைவாக காவலர்கள் பேசினர் என நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர். காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் ஏடிஎஸ்பியும், டிஎஸ்பியும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து 4 வாரத்திற்குள் 3 பேரும் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.