விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றி கழகத்தில் விரைவில் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைவர் விஜய் ஓரிரு நாட்களில் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களை மீறி, ஆதவ் அர்ஜூனா செயல்படுவதாகக் கூறி அவரை 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். இதனையடுத்து ஆதவ் அர்ஜுனா நிரந்தரமாக விசிகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் தான், தமிழக வெற்றிக் கழகம், வாய்ஸ் ஆப் காமன் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நடந்த சந்திப்பில் ஆதவ் அர்ஜூனா மற்றும் விஜய் தரப்புக்கு இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. கட்சியில் இணையப்போகும் ஆதவ் அர்ஜுனா கட்சியின் உட்கட்டமைப்பைப் பலப்படுத்துவார் என்று கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கட்சியின் தலைவர் விஜய் மூலம் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் ஆதவ் அர்ஜுனா பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்யசாமி செயல்பட்டு வருகிறார். ஆதவ் அர்ஜுனா கட்சியில் இணையப்போகும் நிலையில் ஜான் ஆரோக்யசாமி நீக்கப்பட இருக்கிறாரா என்ற கேள்வியும் இதன்மூலம் எழுந்துள்ளது.