அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராகவுள்ள நிர்மல் குமார், தமிழக வெற்றிக்கழகத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டாகப்போகிறது. தொடங்கிய நாள் முதலே, தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது அக்கட்சி. பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் தொடர்ந்து தவெகவில் இணைந்தவண்ணம் உள்ளனர்.
இந்தவகையில், வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனரும் விசிகவில் முன்னாள் துணைப் பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனா விரைவில் தவெகவில் இணைவார் என தகவல் கசிந்தது. இவருக்கு, தேர்தல் யுக்திகளை வகிக்கும் முக்கியமான பொறுப்புகளை வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்த தகவல் இன்னும் உறுதியாகாத நிலையில், அண்ணா திராவிட முன்னேற்ற கழக்கத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராகவுள்ள நிர்மல் குமார், தமிழக வெற்றிக்கழகத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. அந்த தகவல் வெளியான சில நேரங்களிலேயே, பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்திற்கு நிர்மல் குமார் வருகை தந்தார்.
இவரது வருகையை தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனாவும் பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். மேலும், சமீப காலமாக, நாம் தமிழர் கட்சியிலிருந்து பல நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் விலகி வரும் சூழலில், ஏற்கெனவே நாதகவிலிருந்து விலகிய காளியம்மாளும் தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த இந்த தகவல்கள், தவெக-வினரை உற்சாகமடைய செய்துள்ளது.