பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர் web
தமிழ்நாடு

"தூக்கிவீசப்பட்டது நான்தான்; கட்சிக்கு கெட்டப்பெயர் வரக்கூடாதுனு..” - பவுன்சர்கள் மீது இளைஞர் புகார்

தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தள்ளிவிடப்பட்டவன் நான்தான், தள்ளிவிடும் ஆதாரம் தன் செல்போனில் உள்ளதெனகூறி தாயாருடன் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சரத்குமார் என்ற இளைஞர் புகார் அளித்துள்ளார்.

Rishan Vengai

மதுரையில் நடைபெற்ற தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய் நடைமேடையில் நடந்துவந்தபோது அத்துமீறி மேலே ஏறிய இளைஞர் ஒருவரை பவுன்சர்கள் தூக்கி கீழே எறிந்தனர்.

அந்த நிகழ்வு விமர்சனங்களை பெற்ற நிலையில், அது தன்னுடைய மகன் தான் என்று பெண் ஒருவர் பேசும் வீடியோ வெளியாகி மேலும் விமர்சனம் பெற்றது. ஆனால் அந்த தாயாரின் மகன் அது நான் இல்லை என்று மறுத்ததால் குழப்பம் ஏற்பட்டது.

இந்தசூழலில் முன்னர் அது நான் இல்லை என்று மறுத்த அதே இளைஞர், தற்போது பவுன்சர்களால் தூக்கிவீசப்பட்டவன் நான் தான் என்றும், பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்காவிற்குட்பட்ட பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோசம் என்பவரது மகன் சரத்குமார். இவர் மதுரையில் நடைபெற்ற தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்ற நிலையில், அவரை பவுன்சர்கள் தூக்கி வீசியதாக கூறி அவரது தாயார் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். மேலும் தவெக கட்சியை விமர்சனமும் செய்திருந்தார்.

இந்த சூழலில் புதிய தலைமுறை செய்தியாளர் தூக்கிவீசப்பட்டதாக பேட்டியளித்த தாயாரின் வீட்டிகே சென்று, அவருடைய மகன் சரத் இடம் தூக்கிவீசப்பட்ட நபர் நீங்கள் தானா? என உறுதிப்படுத்த கேள்வி எழுப்பினார். ஆனால் சம்பந்தப்பட்ட சரத்குமாரை நேரில் சென்று விசாரித்தபோது, பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட நபர் தான் இல்லை எனவும், தாயாரை சிலர் வற்புறுத்தி பேசவைப்பதாகவும் கூறினார்.

பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர்

இதுஒருபுறம் இருக்க, தூக்கிவீசப்பட்ட மகனின் தாய் என பேசி வெளிவந்த வீடியோ உண்மையல்ல என்றும், உண்மையாக தூக்கி வீசப்பட்டது நபர் நான்தான் எனவும், அந்த பேட்டியில் உள்ளது தனது தாய் அல்ல எனவும் கூறி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் என்ற இளைஞரின் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து குழப்பம் மேலும் அதிகமானது.

தவெக பவுன்சர்கள் மீது புகார்..

இந்த சூழலில் நேரில் சென்று விசாரித்தபோது பவுன்சரால் தூக்கி வீசப்பட்ட இளைஞர் தான் இல்லை என்று மறுத்த பெரம்பலூரை சேர்ந்த சரத்குமார் என்ற நபர், தற்போது தவெக மாநாட்டில் பவுன்சரால் தூக்கிவீசப்பட்டவன் தான் தான் என்றும், தன்னிடம் அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் கூறி, பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

புகாரளித்த பிறகு பேசிய சரத்குமார், "கடந்த 21-ம் தேதி மதுரைல நடந்த தவெக மாநாட்டுக்கு போய் இருந்தன், அப்போ ரேம்வாக் மேடையில் விஜய் நடந்துவரும்போது அவர பார்க்கணும்ன்ற ஆசைல மேடை மேல ஏறுனன். அப்போ பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர் என்ன தூக்கி கீழ வீசிட்டாரு. சுதாரிச்ச நான் கம்பிய புடிச்சிகிட்டன், ஆனாலும் எனக்கு சில அடிலாம் பட்டது. நான் தனியா தான் போனன், வேறு யாருகூடவும் போவல. வீட்டுல வந்து நான் விழுந்தத யார்கிட்டயும் சொல்லல” என தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம்

’இதற்கு முன்னர் அது நீங்க இல்லைனு சொன்னீங்க, இப்போ புகாரளிக்க வந்திருக்கீங்க?’ என்ற கேள்விக்கு, “என்னால கட்சிக்கு எந்த கெட்ட பெயரும் வரக்கூடாதுன்ற எண்ணத்துல இருந்தன். உடல் ரீதியா வலி அதிகமா இருக்கிறதால மெடிக்கல் செக்கப்புக்கு போய்ட்டு வந்திட்டு இருக்கன். பவுன்சரால தூக்கி வீசப்பட்ட பையன் நான் தான், மற்றொரு பையன் வீடியோ போட்டது பற்றி எனக்கு தெரியாது” என்று கூறினார்.

கட்சிக்கு பிரச்னை வரக்கூடாதுனு பொறுமையா இருந்தீங்கனு சொல்றீங்க, இப்போ என்ன பிரச்னை வந்துச்சு ஏன் புகாரளிக்க வந்திருக்கீங்க என்ற கேள்விக்கு, “என்னை யாரும் புகாரளிக்குமாறு வற்புறுத்தவில்லை, யாரும் தொல்லை செய்யவும் இல்லை, யாரும் எதுவும் சொல்லிக் கொடுக்கல, என்னுடைய சுயநினைவோடு தான் வந்திருக்கன். நானும், என் அம்மாவும் மட்டும்தான் வீட்டுல, எனக்கு அப்பா கிடையாது. அதனால புகார் கொடுக்க வந்திருக்கன்” என்று தெரிவித்தார்.

பவுன்சரால் தூக்கி வீசப்பட்ட இளைஞர்

நீங்கதான் விழுந்தீங்கனு சொல்றதுக்கான ஆதாரம் இருக்கா? என்ற கேள்விக்கு, “நான் தான் விழுந்தன்றதுக்கான வீடியோ என்கிட்ட இருக்கு. பவுன்சரால தூக்கிவீசப்பட்ட நான் பாதிக்கப்பட்டதால, பவுன்சர்கள் மேல புகாரளிக்க வந்திருக்கன். இனிமே கட்சி தொண்டர்கள் மேல கவனம் செலுத்தி ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து பண்ணனும்ணு, அதுக்காக தான் புகாரளிக்க வந்துருக்கன். வேற எந்த உள்நோக்கமும் கிடையாது. மாவட்ட நிர்வாகத்துல இருந்துகூட ஃபோன் பண்ணி ஏன் உங்க அம்மா பேசுனாங்கனு கேட்டாங்க, ஆனால் நீ மாத்தி பேசுனு எந்தவிதத்துலையும் யாரும் நிர்பந்திக்கல, நானா தான் கட்சிக்கு எந்த கெட்ட பெயரும் வரக்கூடாதுனு மாத்தி பேசுனன்” என தெரிவித்தார்.

பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர்

சரத்குமாரின் அம்மா கூறுகையில், “கணவர் இல்லாமல் என் புள்ளைய தனியா கூலி வேலை பார்த்துதான் வளர்த்தன். தூக்கி வீசுனதுல என் பையன் உயிர் போயிருந்தா திரும்ப கொடுப்பாங்களா. என் பையன் தூக்கி வீசுனதுல நீதி கிடைக்கனும், அதற்கான இழப்பீடும் கொடுக்கனும்” என பேசியுள்ளார்.