தமிழ்நாடு

ரூ.20 ஆயிரம் லஞ்சம் : பெண் சார் பதிவாளர் கைது

ரூ.20 ஆயிரம் லஞ்சம் : பெண் சார் பதிவாளர் கைது

webteam

புதுக்கோட்டையில் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் சார் பதிவாளர் சுசீலா கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த சுமதி என்பவர், 4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு பாகப்பிரிவினை பத்திரம் பதிவு செய்வதற்காக, மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். சுமதியிடம் முதல்நிலை சார் பதிவாளர் சுசீலா, ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சுமதி புகார் அளித்தார். அவர்களது ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய 20 ஆயிரம் ரூபாயை சுசீலாவிடம் சுமதி கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் சுசீலாவை கையும் களவுமாகப் பிடித்தனர். சுசீலா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்து 9 லட்சம் ரூபாய் பணம், 15 தங்க நெக்லஸ்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டுப்புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.