தமிழ்நாடு

"கொண்டாங்கம்மா நான் தூக்கிட்டுவரேன்" - உதவுவது போல் நடித்து குழந்தையை கடத்திச் சென்ற பெண்

PT WEB

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மூன்று நாட்களாக உதவுவது போல் நடித்து 12 நாளான ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை பிடிக்க காவல் துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர்

திருப்பூர் செரங்காடு மூன்றாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கோபி (30). இவரது மனைவி சத்யா (28). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவருக்கு கடந்த 18 ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கோபி அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இதையடுத்து கடந்த 19 ஆம் தேதி சத்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் குழந்தைகள் வார்டில் இருந்த தாய் மற்றும் சேயை கோபி மற்றும் உறவினர்கள் கவனித்து வந்தனர். இதற்கிடையே நேற்று மாலை கோபி வெளியே சென்று விட்ட நிலையில், உறவினர்களும் அந்த பகுதியில் இல்லாததால் சத்யாவும் குழந்தையும் தனியாக இருந்துள்ளனர். அப்போது சத்யா, சிறிது நேரம் தூங்கியுள்ளார். அதன் பின்னர் சத்யா எழுந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அ டைந்த அவர் அந்த பகுதியில் இருந்த நர்சுகள் மற்றும் காவலாளிகளிடம் தனது குழந்தை கடத்தப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கோபி மற்றும் சத்யாவிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில், குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணின் அடையாளம் தெரிந்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து குழந்தையை கடத்திச் சென்று பெண்ணை தேடி வருகின்றனர்.

விசாரணையில், தனது சொந்தக்காரப் பெண் ஐசியூ-வில் இருப்பதாகக் கூறி மூன்று நாட்களாக அவர்களுக்கு பல்வேறு வகையில் உதவுவது போல் நடித்து வந்துள்ளார் தன்மீது நம்பிக்கை வரும் வகையிலும் நடந்து கொண்ட அந்தப்பெண், சத்யாவின் மாமியார் குழந்தையை எடுத்துக் கொண்டு கீழே வர முயற்சித்த போது நீங்கள் வயதானவர் என்னிடம் குழந்தையை கொடுங்கள் எடுத்து வருகிறேன் எனக் கூறி லாவகமாக குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.