திருமணத்திற்குப் பின்னரும் பெண்கள் அனுபவிக்கும் வரதட்சணை கொடுமை, காலம் கடந்தாலும் இன்னும் ஒழியாத அவலமாக தொடர்ந்துவருகிறது. இதற்கு உதாரணங்களாய் திருமணமான இரண்டே மாதங்களில் உயிரிழந்த ரிதன்யா மரணமும், மதுரையில் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆனபிறகும் காவலர் கணவரால் அடித்து உதைக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலைக்கு தள்ளப்பட்ட ஆசிரியை விவகாரமும் சாட்சிகளாய் நிற்கின்றன.
திருப்பூரில் `கணவர் மற்றும் மாமனார், மாமியாரின் வரதட்சணை கொடுமைத் தாங்க முடியவில்லை' எனக் கூறி திருமணமான இரண்டே மாதங்களில் ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், தமிழகத்தையே உலுக்கிய நிலையில், தற்போது அதே திருப்பூரில் திருமணமான 10 மாதங்களில் ப்ரீத்தி என்ற இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த சுகந்தி என்பவரது மகள் பிரீத்தி, இவருக்கும் ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த சதீஷ்வர் என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
திருமணத்தின் போது 120 பவுன் நகை, 25 லட்சம் பணம், 38 லட்சம் இன்னோவா கார் உள்ளிவற்றை வரதட்சணையாக கொடுத்த நிலையில், பெண்ணின் பூர்வீக சொத்து விற்பனையில் 50 லட்சம் பணம் வருவதை அறிந்து அதனை கேட்டு கணவர் வீட்டில் வரதட்சணை கொடுமை செய்துள்ளனர்.
இந்நிலையில், 10 மாதத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக கணவர் வீட்டில் இருந்து வெளியேறிய ப்ரீத்தி, தாய் வீட்டிற்கு வந்துள்ளார். ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்த பிரீத்தி நேற்று மாலை தாயார் வெளியே சென்ற போது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடலை மீட்ட நல்லூர் போலீசார் உடற்கூறாய்வு சோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஆர்.டி. ஓ மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த ப்ரீத்தியின் கணவர் குடும்பத்தார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனை முற்றுகையிட்ட பெண்ணின் உறவினர்கள், பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிரேதத்தை பெற்றுக் கொள்வோம் என திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனாகத்தில் உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.