சென்னை திருவேற்காடு காவல்நிலையத்தில், காவலர்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவேற்காடு பகுதியில் உள்ள செந்தமிழ் நகரில் ரேணுகா என்பவர் வசித்து வந்தார். இவருக்கும், இவரது பக்கத்து வீட்டில் உள்ள அமிர்தவல்லி என்பவரின் குடும்பத்தினருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தொடர் பிரச்னையின் காரணமாக திருவேற்காடு காவல்நிலையத்தில் ரேணுகா மீது அமிர்தவல்லி புகார் அளித்தார்.
இதுகுறித்த விசாரணைக்காக நேற்று காவல்நிலையம் வந்த ரேணுகா, மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். 80 சதவிகித தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். காவல்துறையினர் அமிர்தவல்லியின் குடும்பத்திற்கு ஆதரவாக செயல்பட்டதே, ரேணுகா தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இறப்பகுதற்கு முன்னர் ரேணுகா அளித்த வாக்கு மூலம் வெளியாகியுள்ளாது. அதில், “திருவேற்காடு காவல் ஆய்வாளர் அலெக்சாண்டர், உதவி ஆய்வாளர் சரவணன் பணம் பெற்று கொண்டு என்னை மிரட்டினர். திருவேற்காடு முன்னாள் தலைவர் மற்றும் கவுன்சிலர் என அனைவரும் எதிராக பேசினர். ஆய்வாளர் அலெக்சாண்டர் பிராத்தல் வழக்கில் என்னை சிறையில் அடைப்பேன் என மிரட்டினார்” என்று தெரிவித்துள்ளார்.