தமிழ்நாடு

மகளிர் தினத்தன்று ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகள் !

webteam

உலக மகளிர் தினமான நேற்று கோவை அரசு மருத்துவமனையில் கூலி தொழிலாளியின் மனைவி ஒருவருக்கு, முதல் பிரசவத்திலேயே மூன்று பெண் குழந்தைகள் பிறந்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளியான இவருக்கு சிந்து என்ற பெண்ணுடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து கடந்த ஆண்டு கருவுற்ற சிந்து, கோவை அரசு மருத்துவமனையில் மகப்பேறு கால சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஸ்கேன் பரிசோதனையில் சிந்துவுக்கு மூன்று குழந்தைகள் கருவில் வளர்வது தெரியவரவே அதற்கேற்றபடி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சர்வதேச மகளிர் தினத்தில் சிந்துவிற்கு மூன்று பெண் குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளது. இரண்டு குழந்தைகள் 1.75 கிலோ எடையிலும் ஒரு குழந்தை 1.5 கிலோ எடையிலும் பிறந்துள்ளது. மேலும் மூன்று குழந்தைகளும் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாக மருத்துவமனை முதல்வர், மருத்துவர் அசோகன் தெரிவித்துள்ளார்.

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறப்பது என்பது பெரும்பாலும் சிக்கலான பிரசவங்களாக இருக்கும். இந்த சூழலில் கோவை அரசு மருத்துவமனை தற்போது வெற்றிகரமாக சிகிச்சை செய்துள்ளதாக மருத்துவமனை முதல்வர் அசோகன் குறிப்பிட்டார். மேலும் குழந்தைகளின் தந்தை சுரேஷ் கூறும்போது, குடும்பத்தில் மூத்தவரான தனக்கு ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளதால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.