திருமுல்லைவாயல் அருகே காவலரை அவரது காதலி பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன். இவர் மனைவி ஜெயா. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக வெங்கடேசனும் ஜெயாவும் விவாகரத்துப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வியாசர்பாடியை சேர்ந்த ஆஷா என்ற பெண்ணுடன் வெங்கடேசனுக்கு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் கடந்த ஆறு மாதமாக திருமுல்லைவாயிலில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை, வெங்கடேசன் தனது வீட்டில் தீ விபத்தில் சிக்கியதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், தீக்காயம் அடைந்திருந்த வெங்கடேசனை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அப்போது வெங்கடேசன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்ததாக ஆஷா கூறினார். ஆனால், வெங்கடேசன் தன் மீது ஆஷாதான் பெட்ரோல் ஊற்றிக் கொல்ல முயன்றதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து ஆஷாவை கைது செய்த போலீசார் விசாரித்தனர். அப்போது, வெங்கடேசனுக்கு வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் ஆத்திரமடைந்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாகத் தெரிவித்துள்ளார். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.