தமிழ்நாடு

ஹெச்.ஐ.வி ரத்தம்:‌ மேலும் ஒரு பெண் புகார்

ஹெச்.ஐ.வி ரத்தம்:‌ மேலும் ஒரு பெண் புகார்

webteam

சேலம் மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு மருத்துவ பரிசோதனைக்காக வந்த கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது குதிரைக்காரன்புதூர். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜீ மகன் சேகர் கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராதா இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு ராதா கர்ப்பிணியாக இருந்த பொழுது மேச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்கு சென்றுள்ளனர், அப்பொழுது ராதாவை பரிசோதித்த மருத்துவர்கள் உடலில் ரத்தம் குறைவாக உள்ளதாக கூறி கர்ப்பிணியான ராதாவுக்கு ரத்தம் செலுத்தியுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலமாக ரத்தம் ஏற்றியதும் ராதாவின் உடலில் அரிப்பு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படவே மருத்துவர்களிடம் புகார் கூறி உள்ளனர். அதற்க்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் புது ரத்தம் ஏற்றினால் அதுபோல பாதிப்புகள் வரும் என கூறியுள்ளனர்.

அதன் பிறகு கடந்த 2015 ஆம் ஆண்டு ராதா மீண்டும் கர்ப்பமாகவே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் வழக்கம் போல் பரிசோதித்துள்ளனர். அப்பொழுது ராதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மருத்துவர்கள் ராதாவின் கணவர் சேகரை வரவழைத்து மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். இதில் சேகருக்கு ஹெச்ஐவி பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் சேகருக்கு செய்த ரத்த பரிசோதனை அறிக்கையை தர மறுத்துள்ளனர். அதிர்ச்சியடைந்த தம்பதியர் கடந்தாண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்தம் ஏற்றியதால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டது என்றும் இதற்க்கு மருத்துவர்களும், ஊழியர்களும் தான் பொறுப்பு என்று கூறியா தம்பதியர் இந்த தகவலை மருத்துவமனையின் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்போவதாக கூறியுள்ளனர். இதனை கேட்ட மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் இதனை வெளியில் கூறினால் உங்களுக்குதான் அவமானம் என்றும் இந்த தகவல் வெளியே சென்றால் உங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று அச்சுறுத்தி உள்ளனர்.

அதன் பிறகு பாதிக்கப்பட்ட தம்பதியரிடம் இந்த  பாதிப்பு 6 மாத காலத்திற்குள் மாத்திரையால் குணமாக்கிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர், அதோடு மாதந்தோறும் அரசு வழங்கும் ரூ 1,000 பெற்று தருவதாகவும் கூறி சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளனர். அதன் பிறகு அந்த தம்பதிகளுக்கு இரண்டாவதாக பிறக்கும் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இல்லாமல் பிறக்க அதற்கான மருந்துகளும் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு மாதந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் ராதா சேகர் தம்பதியருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது வெளியே தெரிய வரவே இருவீட்டாரும் ஒதுக்கிவைத்த நிலையில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் அவர்களுடனான தொடர்பு வைத்து கொள்வதை தவிர்த்துவந்தனர். இதன் காரணமாக அவர்களின் குழந்தைகள் உடன் மற்ற குழந்தைகளை விளையாட விடுவதை கூட அப்பகுதியினர் தவிர்த்துவருவதாக தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக ஹெச்.ஐ.வி ரத்தத்தை ஏற்றியவர்கள் மீது உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த ரத்தம் கொடுத்த நபரை கண்டறிந்து வேறு எங்கும் ரத்தம் கொடுக்காமல் தடுக்க வேண்டும் என்று தம்பதியர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் இரத்தத்தை கொடுப்பவர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் உள்ளது, அவர்களின் உடலில் ஹெச்.ஐ.வி மற்றும் இதர நோய் தொற்று கிருமிகள் உள்ளதா என பரிசோதனை செய்யாமலேயே இரத்தவங்கிக்கு அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. அவ்வாறு அனுப்பப்படும் இரத்தத்தில் அதன் மாதிரிகளை எடுத்து அவர்களாவது சோதனை செய்ய வேண்டும்,ஆனால் இரத்த வங்கியிலும் இரத்தத்தின் வகையை மட்டும் குறித்து வைத்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கி வருவதாலேயே இது போன்ற தவறுகளால் சேகர் தம்பதியர் போல் ஏராளமானோர் மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டு சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் பரிதவித்து கொண்டு இருக்கின்றனர், குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாழ துடிக்கும் இவர்களுக்கு அரசு என்ன செய்யப்போகிறது.

அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவதர்களின் அலட்சியம் காரணமாக எனது மனைவி ஹெச்.ஐ.வியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் உறவுகளை பிரிந்து  அக்கம்பக்கத்தாரால் ஒதுக்கப்பட்டு வாழ வழி தெரியாமல் இருக்கும் இந்த நிலையில் என் மனைவி உடல் நலம் நாளுக்கு நாள் பாதித்து வருவதால் குழந்தைகளுக்கும் வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனது குடும்பத்தை காக்க மாநில அரசு உயர் சிகிச்சை அளிக்கவும் வேலைவாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை எடுப்பதோடு தவறு செய்த அதிகாரிகள் மீதும், இரத்தம் கொடுத்தவர மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.