தமிழ்நாடு

காரை துரத்திய காட்டுயானை – ஓட்டுனர் உஷாரானதால் உயிர் தப்பிய குடும்பம்!

webteam

காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே காட்டுயானை காரை துரத்திய பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கரும்பு லாரிகள் சத்தியமங்கலத்தில் உள்ள ஆலைக்கு செல்கின்றன. ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் சோதனைச் சாவடி தேசிய நெடுஞ்சாலையில் கரும்புக்காக யானைகள் முகாமிடுவது வழக்கமாகி விட்டது.

இந்நிலையில் சாம்ராஜ் நகரில் இருந்து குழந்தைகள், பெண்கள் என குடும்பம் சகிதமாக காரில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே கார் வந்தபோது கரும்புத் துண்டுகளை சாப்பிட்டபடி ஒற்றை யானை நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது.

இதை கவனித்த ஓட்டுநர் காரை மெதுவாக அதனருகே இயக்கினார். இதையடுத்து சாப்பிடும் போது இடையூறு செய்வதாக கருதிய யானை காரை துரத்தியது. அப்போது காரில் இருந்த குழந்தைகள், பெண்கள் பயத்தில் அலறினர். ஓட்டுநர் வேகமாக காரை பின்னோக்கி இயக்கி தப்பினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.