தமிழ்நாடு

“இந்த உடையை அணியவே வெட்கப்படுகிறேன்” காக்கிச் சட்டையை விமர்சித்த டிவி நடிகை

“இந்த உடையை அணியவே வெட்கப்படுகிறேன்” காக்கிச் சட்டையை விமர்சித்த டிவி நடிகை

webteam

தொலைக்காட்சி நடிகை ஒருவர் அரசையும், காவலர்களையும் அநாகரிக வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தொலைக்காட்சி நடிகை நிலாணி, டிவி தொடர் படப்பிடிப்பின் போது பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது. 10 பேரை கொன்றுள்ளனர். அமைதியான வழியில் போராடுகிறோம். நான் சூட்டிங்கில் இருக்கிறேன். இல்லை என்றால் தூத்துக்குடி சென்று போராட்டத்தில் பங்கேற்றிருப்பேன். நான் இந்தக் காவல்துறை உடையை அணிந்திருப்பதற்கு வெட்கப்படுறேன். உடம்பு கூசுது. இந்தப் போராட்டம் இதோடு முடியப்போவதில்லை. இனிமேல்தான் ஆரம்பம். தமிழர்கள் தீவிரவாதிகள் போல் சுட்டுக்கொன்றுள்ளனர். அதுதான் அவர்களின் திட்டம். இலங்கை போல தமிழகத்திலும் தமிழர்களை கொல்ல திட்டுமிட்டுவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசும் அவர், “மக்களை நெஞ்சில் சுட்டுக்கொல்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள். போராட்டத்தை ஒருங்கிணைத்த 8 பேர் திட்டமிட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நமது வளங்கள் அனைத்தும் திருப்பட்டுள்ளன. நாமும் எப்படியும் இறந்துவிடுவோம். எல்லோரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அரசு வேலைகளை புறக்கணியுங்கள். விவசாயிகளையும், காவலர்களையும் அரசு மோத வைத்துள்ளது. இதற்கு அரசு பதிலளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதுதவிர அநாகரிக வார்த்தைகளால் அரசை திட்டியுள்ளார். இவர் மீது வடபழனி காவல்நிலையத்தில் 419 - காவல் உடை அணிந்து மோசடி செய்தல், 500 - அவதூறு பரப்புதல், 153 - கலவரத்தை உண்டாக்கும் வகையில் பேசுதல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று நடைபெற்ற போராட்டத்தின் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் கந்தையா, ஷண்முகம், மனிராஜ், ஸ்நோலின், வினிதா, கிளாஸ்டன், ஆண்டனி செல்வராஜ், ரஞ்சித்குமார், தமிழரசன், கார்த்திக் உள்ளிட்ட 11 பேர் உயிரிந்தனர். இதில் 17 வயது மாணவி ஒருவரும் வாயில் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடியில் இன்றும் போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் வெடித்துள்ளது. இதில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். அத்துடன் காளியப்பன் (22) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.