ஆதார் அட்டையைக் காட்டி பெண் ஒருவர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் அதனை ஏற்க மறுத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பெண்கள் சபரிமலைக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்ல முயன்று, போலீஸ் தடியடி நடத்தி, சபரிமலையை மூடுவோம் என்ற அளவில் விவகாரம் வலுத்துள்ளது.
சபரிமலைக்கு வரும் வாகனங்களில் பெண்கள் இருக்கிறார்களா என சில அமைப்பை சேர்ந்த பெண்களே உரிய சோதனை செய்த பின்பே உள்ளே அனுமதிக்கின்றனர். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த லதா என்பவர் சபரிமலைக்கு செல்வதற்காக வந்தார். அவரது தோற்றம் 50வயதை தாண்டியவரை போல் இல்லை எனக் கூறி அவரை அனுமதிக்க மறுத்து விட்டனர். அவரும் அவரோடு வந்தவர்களும் வயது 50-ஐ தாண்டி விட்டது எனக் கூறினாலும் யாரும் ஏற்க தயாராக இல்லை.
ஒரு கட்டத்தில் என்ன செய்வதென தெரியாத லதா “என்ன செய்தால் உள்ளே விடுவீர்கள்” எனக் கேட்க, உங்கள் வயது 50ஐ தாண்டி விட்டது என நிரூபித்தால் அனுமதிக்கிறோம் எனக் கூறிவிட்டனர். தனது பையில் ஏதேனும் அடையாள அட்டை உள்ளதா என அவர் தேடிக் கொண்டிருந்தார். திடீரென அவருக்கு ஆதார் அடையாள அட்டை கொண்டு வந்த ஞாபகம் வந்தது. தனது பணப்பையில் இருந்து ஆதாரை எடுத்து அவர்களிடம் காண்பித்தார்.
ஆதார் அடையாள அட்டையில் உள்ள தகவல் அடிப்படையில் அவருக்கு தற்போது வயது 52 என இருந்தது. அதை போராட்டக்காரர்கள் புரிந்து கொண்டு அவரை தரிசனத்துக்கு செல்லுமாறு அனுமதித்தனர். இது குறித்து பேசிய லதா “எனது தோற்றம் 50வயது பெண் போல் இல்லை எனக் கூறி, என்னை அனுமதிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள், நான் மிகுந்த பக்தியோடு எனது குடும்பத்தாரோடு சேர்ந்து ஐயப்பனை பார்க்க வந்தேன். இவர்களது சண்டையில் எங்கே தரிசனம் இல்லாமல் போய்விடுமோ என பயந்தேன், நல்ல வேளை ஆதார் கைகொடுத்தது” என்றார்.