திருச்செங்கோடு 2-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றார்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் கருவேப்பம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அன்பரசன். இவரது மகள் ரியா. திருநங்கையான இவர் உள்ளாட்சித் தோ்தலில் திருச்செங்கோடு 2-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட திமுகவிடம் விருப்ப மனு அளித்திருந்தார். அதன்படி, அந்தப் பகுதிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட வேட்பாளராக திருநங்கை பிரியாவை அக்கட்சி தேர்வு செய்தது.
தேர்தல் முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த ரியா 947 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் ரியா 2698 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 1751 வாக்குகள் பெற்றார்.
தேர்தலில் வெற்றி பெற்ற ரியாவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.