தமிழ்நாடு

பூட்டை உடைத்து ‘எல்.இ.டி’ டிவியை திருடிய நபரை மடக்கிப்பிடித்த மக்கள்

பூட்டை உடைத்து ‘எல்.இ.டி’ டிவியை திருடிய நபரை மடக்கிப்பிடித்த மக்கள்

webteam

சேலத்திலுள்ள வீட்டின் பூட்டை உடைத்து எல்.இ.டி டிவியை திருடியவரை மக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம் ஒமலூர் அருகே உள்ள பாகல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரை. தனியார் வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில்  ‘எல்.இ.டி’ டிவி மற்றும் சில பொருட்கள் இருந்துள்ளன. இதை வீடு புகுந்து திருடும் நபர் ஒருவர் நோட்டமிட்டு வந்துள்ளார். துரை எப்போது பணிக்கு செல்வார், வீட்டில் எப்போது ஆட்கள் இருக்கமாட்டார்கள் என்பதையும் கவனித்து வந்துள்ளார். 

இந்நிலையில் துரை இன்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்டு காத்திருந்த திருடன், துரை வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளர். பின்னர் வீட்டில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள எல்.இ.டி டிவி மற்றும் பொருட்களை கொள்ளையடித்துள்ளார். துரை, வேலைக்கு சென்ற பின்னரும் வீடு திறந்திருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், சந்தேகம் அடைந்துள்ளனர். வீட்டில் இருப்பது யாரென்று அறிய சென்றுள்ளனர். அப்போது உள்ளே புதிய நபர் ஒருவர் டிவி உள்ளிட்ட பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். 

பின்னர் அந்த நபர் திருடன் என்பதை அறிந்து கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த தப்பியோடிய அந்த நபரை, மக்கள் மடக்கிப்பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் ராஜ் என்பது தெரியவந்துள்ளது. அந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஓமலுர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.