தமிழ்நாடு

அதிக கட்டணம் வசூல் செய்த தியேட்டர் - பணத்தை திருப்பிக்கொடுக்க வைத்த சார் ஆட்சியர்

அதிக கட்டணம் வசூல் செய்த தியேட்டர் - பணத்தை திருப்பிக்கொடுக்க வைத்த சார் ஆட்சியர்

webteam

வேலூரில் சினிமா பார்க்க வந்தவர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட, அதிக கட்டணம் வசூல் செய்த திரையரங்கு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் சோளிங்கரில் இயங்கிவரும் திரையரங்கு ஒன்றில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தது. இதுதொடர்பாக இராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத், திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ.80-ஐ விட கூடுதலாக, முதல் வகுப்பிற்கு 150 ரூபாயும், பால்கனிக்கு 200 ரூபாயும் வசூல் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதிகமாக வசூல் செய்த தொகை ரூ.33,830-ஐ திரைப்படம் பார்த்த 589 பார்வையாளர்களுக்கு திரும்ப வழங்க சார் ஆட்சியர் உத்தரவிட்டார். 

அதன்படி, கூடுதலாக வசூல் செய்யப்பட்ட தொகை பார்வையாளர்களுக்கு உடனடியாக திரும்ப வழங்கப்பட்டது. தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ஏசி வசதியுள்ள, மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூபாய் ரூ.120. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் ரூ.100. ஊராட்சிப் பகுதிகளில் ரூபாய் ரூ.75 ஆகும். இதனால் தீபாவளி பண்டிகைக்கு அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். 

எனவே உத்தரவை மீறிய தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று சார் ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வில் சோளிங்கர் கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன், சோளிங்கர் வருவாய் ஆய்வாளர் யுவராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.