செய்தியாளர் பிரசன்னா வெங்கடேஷ்
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு விவகாரம் பூதாகரமான நிலையில், மேயர் இந்திராணி விரைவில் மாற்றப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், மதுரை கிழக்கு மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார் இடைக்கால மேயராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு திமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடக்கிறது என்று விரிவாக பார்க்கலாம். 150 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டலக் குழுத் தலைவர்களும் ராஜினாமா செய்ய அறிவுறுத்தப்பட்டனர். இதில், நகரமைப்புத் தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்பு குழுத் தலைவர் விஜயலட்சுமி, மற்றும் மண்டலத் தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, வாசுகி சசிகுமார் ஆகிய ஆகிய அனைவரும் ராஜினாமா செய்தனர். ராஜினாமாவை மாநகராட்சி ஆணையர் ஏற்றுக்கொண்ட நிலையில், விசாரணை மேயர் பக்கம் திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி மற்றும் அவரது கணவர் பொன்வசந்த் ஆகியோர் பிடிஆர் ஆதரவாளராக இருக்கும் நிலையில், பொன்வசந்த் கட்சியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டார். அதன் பின்னணியில், அவரது நெருக்கமான பல மண்டலக் குழுத் தலைவர்களும் ராஜினாமா செய்த நிலையில், கிழக்கு மண்டல தலைவராக இருந்த வாசுகி சசிகுமாரும் ராஜினாமா செய்துள்ளார். அமைச்சர் பி.மூர்த்திக்கு நெருக்கமானவராக அறியப்படும் இவர், இந்திராணிக்கு மாற்றாக மேயர் இடத்திற்கு வர வாய்ப்பிருப்பதாக மதுரை திமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் இரண்டு அமைச்சர்களாக பி.மூர்த்தி மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருந்தாலும், மாவட்ட அரசியல் கட்டமைப்பில் பனிப்போர் நிலவி வருகிறது.
அதாவது, யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, அவர்களே அந்தந்த கட்சியின் தென்மாவட்ட அரசியல் முகமாக வலிமை பெற்று நிற்கின்றனர் என்பதால், அந்த வாய்ப்பை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த காலத்தில் அ.தி.மு.க ஆட்சியில், செல்லூர் ராஜூவுக்கும், ஆர்.பி.உதயகுமாருக்கும் இடையே இருந்த பனிப்போர், வெளிப்படையாக தெரியாமல் இருந்தது. ஆனால், திமுக அமைச்சர்கள் இடையே தற்போது நடைபெறும் மோதல் வெளிப்படையாக தெரியவந்துள்ளது. தற்போதைய சூழலில் மாவட்டத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் பி.மூர்த்திக்கு, பெரும்பாலான மாவட்ட செயலாளர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிடிஆருக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படும் மேயர் இந்திராணியின் பதவி எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், பி.மூர்த்திக்கு நெருக்கமான வாசுகி சசிகுமாருக்கு மேயராக வாய்ப்பு உருவாகியிருப்பது, உள்கட்சி மோதல் வழியாக மாநகராட்சி நிர்வாகத்தைக் கைப்பற்றும் பணி பி.மூர்த்தியின் அணியில் தொடங்கப்பட்டுள்ளதாக மதுரை திமுக வட்டாரங்கள் விவரிக்கின்றன. இதனிடையே, சொத்து வரி உயர்வையடுத்து, மக்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்மறை கருத்தை சமாளிக்கவும், எதிர்கட்சிகள் அதனை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்ற சூழ்நிலையை சமாளிக்கவும், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார். மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் நடைபெறும் இந்த மாற்றங்கள், ஒரு ஊழல் புகாருக்கு பதிலளிக்கும் நடைமுறைகள் மட்டுமல்ல. இது, தென்மாவட்டங்களில் திமுகவின் ஆட்சி முகம் யார் என்பதை தீர்மானிக்கும் உள்கட்சி அதிகாரப் போட்டியின் வெளிப்பாடாகவும் மாறியுள்ளது