அமரேஷ் பூஜாரி
அமரேஷ் பூஜாரி புதிய தலைமுறை
தமிழ்நாடு

நவீன திட்டங்கள் தொடக்கம்: சிறைத்துறையில் சாதித்த அமரேஷ் பூஜாரி!

PT WEB

செய்தியாளர் ஆனந்தன்

தமிழகத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் என சிறைச்சாலைகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக, 134 சிறைகள் உள்ளன. சிறையில் ஆயிரக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள்; அவர்களைப் பார்ப்பதற்கு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் எனப் பலரும் ஒவ்வொரு நாளும் சந்திக்க வருவது உண்டு. அதற்கேற்ப பலகட்ட அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

அந்தவகையில் நவீன காலத்துக்கு ஏற்ப சிறைத் துறையில் புதிய நடைமுறைகளைக் கொண்டுவந்தவர் டிஜிபி அமரேஷ் பூஜாரி. பல குற்றவாளிகளைச் சிறையில் அடைத்து வைத்து கண்காணிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல, அது மிகவும் சவாலான காரியமே. அதற்கு என்று பணியில் ஈடுபடும் சிறைப் பாதுகாவலர் மன தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட இடத்தில் ஒரு அதிகாரி மாற்றத்தைக் கொண்டுவரும்போது அது, நிச்சயம் வரலாறாகத்தான் பார்க்கப்படும். அந்த வரலாற்றின் பக்கங்களில் அமரேஷ் பூஜாரியும் தற்போது இடம்பிடித்துள்ளார்.

பார்பதற்கு மிகவும் சாதாரணமாக இருக்கும் அவர்தான் சிறைத்துறையில் பலவித மாற்றங்களைக் கொண்டுவந்து அதைச் சாத்தியப்படுத்தியுள்ளார்.

பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு, கைதிகளின் மன ஆரோக்கியத்திற்காக யோக பயிற்சி, சிறையில் உள்ள கைதிகளைக் கொண்டு விவசாயம், சிறுதொழில் மூலம் பொருட்களை உருவாக்கி சிறைச் சந்தை ஆகியவற்றை உருவாக்கினார்.

சிறைக் கைதிகளுக்கு மாதச் சம்பளம் வழங்கி பெட்ரோல் பங்கையும் செயல்படுத்தினார். மேலும், சிறைக் கைதிகளுக்கு என உணவுகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவந்தார்.

சிறைவாசிகள் துணி துவைப்பதற்கு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நீண்ட நாட்கள் சிறையில் இருக்கும் நபர்களை வீடியோகால் செய்து குடும்ப உறுப்பினரிடம் பேசும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டது.

சிறையில் நூலகம், கைதிகளுக்கு ஆதார் அட்டை, இப்படி பல சிறப்பான திட்டங்களை அவர் உருவாக்கினார். மேலும் அவர் வகித்த பொறுப்புக்கு ஏற்ப சிறப்பாக செயல்பட்டு வந்தார். அதேநேரத்தில், கைதிகளிடம் கூட்டுச்சேர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்ட சிறை பாதுகாவலர்களையும் பணியிலிருந்து நீக்கி அதிரடி காட்டினார். ஒருசில சிறைக்கைதிகள் தப்பிச் சென்றனர். அப்போது சரியாக பணியில் ஈடுபடாத நபர்களை எச்சரிக்கை செய்து துறை ரீதியான நடவடிகை மேற்கொண்டார்.

தமிழக அமைச்சர் ஒருவர் சிறையில் இருந்தபோதுகூட, தன் பாணியில் சரியான முறையில் நடவடிக்கைகளைக் கையாண்டு வந்தார். சமீபத்தில் காவலர் ஒருவரின் குழந்தைக்கு, உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக இவர் காதுக்கு செய்தி எட்டிய உடனேயே அதற்கு உதவி செய்து குழந்தையைக் காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.