கையடக்க கணிணி மூலம் ரயில்களில் டிக்கெட் பரிசோதிக்கும் முறையை சோதனை அடிப்படையில் தெற்கு ரெயில்வே இன்று தொடங்கியுள்ளது.
இந்திய ரயில்வே துறையில் உள்ள 16 மண்டலங்களில் தெற்கு ரயில்வே என்றும் சிறப்பு தான். காரணம் இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டிதரும் முதல் மண்டலம். இந்திய ரயில்வே துறைதான் தெற்கு ரயில்வேயால் கல்லா கட்டுகிறது என்றும் கூறலாம். இதற்கு காரணம் 90% அதிகமானோர் இங்கு மட்டும் தான் டிக்கெட் எடுத்து பயணிக்கின்றனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே தற்போது ‘காகிதமில்லா சேவை’ திட்டத்தில் தீவிரம் காட்டிவருகிறது. அதன் ஒரு பகுதியாக ரயில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு பயணிகள் விவரம் குறித்த அட்டவணை காகிதத்திற்கு பதிலாக கணிணி மூலம் டிக்கெட் பரிசோதிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் டிக்கெட் பரிசோதகர்களின் கையில் இருக்கும் காகிதங்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு ஏற்ப கையடக்க கணிணி (Tab) மூலம் ரயில் டிக்கெட் பரிசோதனை முறையை இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சில ரயில்களில் இந்த சோதனை முறையை அறிமுகப்படுத்தபட்டு நடைமுறைப்படுத்தியுள்ளது.
மேலும் இதன் சிறப்பு என்னவென்றால் உதாரணமாக ஒரு பயணி சென்னை முதல் திருச்சி வரை முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அவர் கடைசி நேரத்தில் பயணிக்கவில்லை, அப்போது அவரது டிக்கெட் காலி என்று சென்னையில் டிக்கெட் பரிசோதகர் (டிடிஇ) பரிசோதித்த நிலையில் கையில் உள்ள கையடக்க கணிணியில் அப்டேட் செய்வார். பின் உடனே ஆன்லைனில் காலி என அறிவிக்கப்படும். இதனால் அதனை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாகவோ,கவுண்டர் மூலமாகவோ அடுத்த ரயில் நிலையமான தாம்பரம், செங்கல்பட்டு போன்ற நிறுத்தத்தில் இருந்து திருச்சி செல்ல விரும்புவர் கூடுதல் கட்டணம் இல்லாமல் டிக்கெட் எடுக்க முடியும். மேலும் காகித பயன்பாடு குறைந்து முறைகேடுகள் தவிர்க்கப்படும் என்கின்றனர். இது பற்றி ரயில் பயணிகளிடம் கேட்ட போது இந்த நடைமுறை சிறப்பான ஒன்று என்று கருத்து தெரிவிக்கின்றனர்.