தமிழ்நாடு

சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி: அதிகாரிகளின் அலட்சியம் - மீண்டும் மீண்டும் மயக்கமடைந்த மாணவி

webteam

திருவாரூர் அருகே பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் அலட்சியத்தாலர் மயக்கம் அடைந்த மாணவியை அழைத்து செல்ல ஆசிரியை இல்லாத சக மாணவிகள் தூக்கிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சரியாக 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்ட பள்ளிக்கல்வித் துறை நிர்வாகிகள் மாணவிகளை எட்டு மணி முதல் வரிசையில் நிற்க வைத்து வரக்கூடிய வரும் விருந்தினர்களை வரவேற்க பயிற்சி அளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மாணவி ஒருவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதையடுத்து ஆசிரியை ஒருவர் மாணவியின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை ஆசுவாசப்படுத்தி மற்றொரு மாணவியின் உதவியோடு வகுப்பறைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மயக்கமடைந்த மாணவியோடு கூடுதலாக வேறு எந்த ஆசிரியரோ அல்லது அங்கு வந்திருந்த மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளோ உடன் செல்லவில்லை.

இந்நிலையில், சிறிது தூரம் சென்ற அந்த மாணவி மீண்டும் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அப்போது அவரை அழைத்துச் சென்ற சக மாணவி வேறு யாரும் இல்லாததால் அந்த மாணவியை தனி ஒரு ஆளாக தூக்கிச் சென்று வகுப்பறையில் ஓய்வெடுக்க வைத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதன்பிறகு சரியான நேரத்திற்கு நிகழ்ச்சிக்கு வந்த ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினர். அதன் பிறகு மாணவி ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் தெரிய வந்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை கடிந்து கொண்டனர்.