தமிழ்நாடு

வாணியம்பாடி: தடுப்புச்சுவர் இல்லாததால் கழிவுநீர் ஓடையில் சைக்கிளுடன் விழுந்த பள்ளி மாணவர்!

சங்கீதா

வாணியம்பாடியில் தடுப்புச்சுவர் இல்லாத கிளையாற்றில், சைக்கிள் உடன் கழிவு நீரில் விழுந்த பள்ளி மாணவனை பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி மீட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர மையப் பகுதி சி.எல். சாலையின் குறுக்கே கிளையாற்றின் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தை அரசுப் பள்ளி, தனியார் பள்ளி, அரசு நிதி உதவி பெரும் பள்ளி என சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் என நாள் ஒன்றிற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த தரை பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் அந்த தரைப்பாலத்தில் பொருத்தப்பட்டு இருந்த தடுப்புக் கம்பிகள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, தற்போது தரைப்பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாத காரணத்தால், இன்று அவ்வழியாக பள்ளி முடிந்து வீடு திரும்பிய 8-ம் வகுப்பு மாணவன் சைக்கிளுடன் கிளை ஆற்றில் தவறி விழுந்துள்ளான். ஆறு முழுவதும் கழிவுநீர் தேங்கி இருந்ததால், புத்தகம் மற்றும் உடைகள் முழுவதும் கழிவு நீரில் மூழ்கியதால் மாணவனை, அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு நீண்ட நேரம் போராடி மீட்டுள்ளனர்.

அந்தக் காட்சிகளை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வீடியோ காட்சிகள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
இந்தப் பாலத்தில் வேறு ஏதாவது அசம்பாவிதம் நடைபெறும் முன் உடனடியாக, நகராட்சி ஆணையாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.