தமிழ்நாடு

5,8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு: விருதை ஒப்படைக்க முயன்ற ஓய்வுபெற்ற ஆசிரியர்..!

webteam

ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் தனது நல்லாசிரியர் விருதை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சோலியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர் அல்லிமுத்து. பணியாற்றிய காலத்தில் இவருக்கு தமிழக அரசு, சிறந்த நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை வழங்கியது.

இந்த ஆண்டு முதல், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை நடத்துவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. உடனடியாக அரசு இந்தத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அல்லிமுத்து என்பவர் வந்திருந்தார். மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை வழங்கிய அவர், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு பொதுத்தேர்வு நடத்துவதை கைவிட வேண்டும் என்றும், அவ்வாறு தேர்வு நடத்தப்பட்டால் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி மட்டுமல்லாமல், மன வளர்ச்சியும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் 2012 மற்றும் 2013-ம் ஆண்டு தமிழக அரசு தனக்கு வழங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதை அரசிடம் திருப்பி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் தமிழக அரசு அவருக்கு அளித்த விருது மற்றும் நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழியிடம் ஒப்படைக்க முயன்றார்.

கோரிக்கை மனுவை மட்டும் பெற்றுக்கொண்ட ஆட்சியர், மனு குறித்து தமிழக அரசிடமிருந்து பதில் பெற்று தருவதாக தெரிவித்தார்.