cm vijay pt
தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும்.. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் நிறைவேற்றினார்.

Rishan Vengai

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் மூலம், இனி மாநிலத்தின் அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தொடக்கமாக கட்டாயம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. தமிழ் வெறும் மொழி அல்ல, நம் உயிரும் உணர்வும் என அவர் உரையில் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் கட்டாயம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரவிருக்கிறார் என்ற தகவல் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தசூழலில் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் கூட்டப்பட்ட சட்டப்பேரவையில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படவேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார் முதல்வர் விஜய். அப்போது பேசிய அவர், “இந்தியாவின் நெற்றியில் வைக்கக்கூடிய வெற்றிப் பொட்டுதான் நம் தமிழ்நாடு. தமிழ் என்றால் கெத்து; தமிழ் என்றால் அது தனி பவர். தமிழ் மொழி என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும். தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல; நம் உயிர். பேசினால் ஓசை மட்டும் இல்லை, உணர்வும் வரும். நம் தாய்மொழி குறித்த உணர்வை புரியவைக்க தாய் மொழி, தமிழ் மொழி என்று சொல்வதே போதும்” என்று பேசினார்.

மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. உணர்வோடு கலந்திருக்கக்கூடிய தமிழை பின்னுக்குத் தள்ளினால் எப்படி பொறுத்துக்கொள்வது?. தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலிடத்தில் இருக்க வேண்டும். அது நம் உரிமை என கூறினார்.