தமிழ்நாடு

கஜா புயல் : உதவி பதிவாளர் பணியிடை நீக்கம்

கஜா புயல் : உதவி பதிவாளர் பணியிடை நீக்கம்

webteam

கஜா புயலால் சாய்ந்த தேக்கு மரங்களை திருடிய புகாரில் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக உதவி பதிவாளர் வேலு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ளது தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம். அதன் அருகே உள்ள வெட்டாற்றுப் படுகையில் ஏராளமான தேக்கு மரங்கள் இருந்தன. அவற்றில் பல கஜா புயலில் சிக்கி சாய்ந்துவிட்டன. அவை திருடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அது உண்மை என்பது விசாரணையில் தெரியவந்தது. பின் நீலக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வருவாய்த்துறை ஊழியர் பன்னீர்செல்வம் தேக்கு மரங்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடைபெற்ற விசாரணையில் மத்தியப் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு இதில் தொடர்பிருப்பதும், திருடப்பட்ட தேக்கு மரங்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதனைதொடர்ந்து மரங்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், பன்னீர்செல்வம் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் முருகேசன், சிவராமகிருஷ்ணன், கண்ணையன், தீனதயாளன் ஆகியோரை கைது செய்தனர். தேக்கு மரத்திருட்டில் பல்கலைக்கழக உதவி பதிவாளர் வேலுவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மூவர் குழுவை அமைத்தது பல்கலைக்கழக நிர்வாகம். வேலுவிடம் இருந்த ஐந்து பொறுப்புகள் பறிக்கப்பட்டு புகாருக்கு உள்ளான பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்திய மூவர் குழு தனது அறிக்கையை அளித்தது. இதனையடுத்து வேலுவை பணியிடை நீக்கம் செய்து மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தர் தாஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் வேலு கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.