தமிழ்நாடு

கொத்தடிமையாய் இருந்து உதவியாசிரியரான கதை.. - ரியல் ‘வாகைசூட வா’

கொத்தடிமையாய் இருந்து உதவியாசிரியரான கதை.. - ரியல் ‘வாகைசூட வா’

webteam

செங்கல் சூளையில் கொத்தடிமையாக மீட்கப்பட்ட ஒருவர் தொழிற்கல்வி பயின்று அந்த நிறுவனத்திலேயே உதவிப்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கிராமத்தில் பிறந்தவர் மூர்த்தி. மூர்த்தியின் தந்தை குடும்‌பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில், தாயும் தற்கொலை செய்து கொண்டார். மூர்த்தியின் மாமா வாங்கியதாக கூறப்படும் கடனுக்காக, மூர்த்தியும் அவரது மூத்த சகோதரியும் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் சிறுவயதிலேயே கொத்தடிமைகளாக சேர்க்கப்பட்டனர். கடந்த 2014ஆம் ஆண்டு மூர்த்தியையும் அவரது சகோதரியையும் தொண்டு நிறுவனம் ஒன்று அரசின் உதவியுடன் மீட்டது. 

14 வயதில் மீட்கப்பட்ட மூர்த்தி, சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள இண்டர்மிஷன் தொழிற்பயிற்சி பள்ளியில் மாணவராக சேர்க்கப்பட்டார். மூர்த்தியின் தொழிற்திறனை அறிந்த தொழிற்பயிற்சி நிறுவனத்தின் நிர்வாகத்தினர் பயிற்சிப் படிப்பை முடித்தவுடன், அவரை அத்தொழிற்பயிற்சி நிறுவனத்திலேயே உதவிப்பயிற்சி ஆசிரியராக வேலைக்கு அமர்த்திக் கொண்டனர். செங்கல் சூளை முதலாளிகளின் வளர்ச்சிக்காக கொத்தடிமையாய் போராடிவந்த மூர்த்தி, தற்போது தன் வாழ்வாவதாரத்திற்காக சொந்தக்காலில் நிற்பதற்கு மகிழ்ச்சியுடன் போராடி வருகிறார். அதிர்ச்சியும் சோகமும் மட்டுமே நிறைந்திருந்த கடந்த கால வாழ்க்கை நிலைமாறி, ஒரு திறன்மிக்க உதவி பயிற்சி ஆசிரியராக தற்போது தலைநிமிர்ந்து நிற்கிறார் மூர்த்தி.