தமிழ்நாடு

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கக் கோரி பாஜகவினர் போராட்டம்

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கக் கோரி பாஜகவினர் போராட்டம்

JustinDurai
குற்றால அருவிகளை திறக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தடையை மீறி அருவியில் குளிக்கும் போராட்டம் நடைபெறும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகளின் நகரமான குற்றாலம், தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். கடந்த மே மாதம் கொரோனா இரண்டாம் அலை காரணமாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின்போது குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகையில், தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் சுற்றுலாப்பயணிகளின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டன. இதனால் அங்குள்ள சுற்றுலா வருவாயை சார்ந்தோரின் வாழ்வாதாரம் இயல்புநிலைக்கு திரும்பியது. ஆனால் 5 மாதங்களைக் கடந்தும் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் வரத்தின்றி குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக, அங்குள்ள சீசன் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், விடுதி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் வருமானம் இழந்து திண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், குற்றால அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியும், கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாப்பயணிகள் வருகை இல்லாததால் பெரும் நஷ்டத்தில் இருந்து வரும் குற்றாலம் பேரூராட்சி குத்தகைதாரர்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி, 2 ஆண்டுக்கான குத்தகைத் தொகையை ரத்து செய்யக்கோரியும் பாஜகவினர், ஆட்டோ ஓட்டுனர்கள், வியாபாரிகள், உணவு விடுதி ஊழியர்கள் சார்பில் குற்றாலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலத்தில் அனைத்து சுற்றுலாத்தலங்களும் முழுமையாக திறக்கப்பட்டுவிட்ட நிலையில் குற்றாலத்தில் மட்டும் தடை நீடித்து வருகிறது. அருவிகளில் குளிக்க அனுமதிக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் விரைவாக தலையிட்டு குற்றால அருவிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் தடையை மீறி குற்றால அருவியில் குளிக்கும் போராட்டம் நடைபெறும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
பொதுவாக வடகிழக்குப் பருவமழையைப் பெய்வதைப் பொறுத்து டிசம்பர் இறுதிவரை குற்றால அருவிகளில் தண்ணீர்வரத்து இருக்கும். அதன்பின் அருவிகள் நீரின்றி வறண்டுவிடும். அதற்குப்பின், ஜூன் மாதத்தில்தான் மீண்டும் சீசன் துவங்கும். நவம்பர் மாதம் முதல், அருவிகளில் சுற்றுலாப்பயணிகளை குளிக்க அனுமதித்தால்கூட, சுற்றுலா வருவாயை சார்ந்தோரின் வாழ்வாதாரம் இரு மாதங்களுக்கு பிழைக்கும். அதனைவிட்டால் அடுத்த ஆண்டு ஜூன் வரை அவர்களின் வாழ்வாதாரம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஓராண்டுக்கு மேலாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவிக்கும் மக்களுக்கு இது மேலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே குற்றால அருவிகளை மீண்டும் திறக்க அரசு விரைந்து அனுமதியளிக்க வேண்டும் என்பதே குற்றாலத்தில் சுற்றுலாத் தொழிலை நம்பிவாழும் மக்களின் எதிர்பார்ப்பாகும்.