கருத்துச் சொல்வதற்கும், கேலி பேசுவதற்கும் பயன்படுத்திவரும் மீம்ஸ்களைக் கொண்டு பேராசிரியர் ஒருவர் கல்லூரி மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் நடத்தி வருகிறார்.
அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் பாண்டி குமார். மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் மற்றும் மீம்ஸ்கள் மூலம் கணினி அறிவியல் பாடத்தை நடத்துவதே இவரது தனிச் சிறப்பு. இவர் C, C++ போன்றவற்றிற்கான மீம்ஸ் புத்தகங்களை உருவாக்கியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவரான இவர், 12ஆம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்றதால் பல கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் எந்தெந்த கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போனதோ அந்தக் கல்லூரிகளில் எல்லாம் பேராசியராக பணியாற்றி உள்ளார். கிராமப்புற மாணவர்களும், முதல் தலைமுறை பட்டதாரிகளும் எளிய முறையில் புரிந்து கொள்ளும் வகையில் பாடம் நடத்த வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்கிறார் பாண்டி குமார்.
பாண்டிகுமாரின் பாடம் நடத்தும் முறை குறித்து பேசிய மாணவர்கள், மீம்ஸ்கள் மூலம் எளிமையாக புரியும்படி பாடம் நடத்துவதால் இவரது வகுப்பை தவறவிடுவது இல்லை என தெரிவிக்கின்றனர்.